Skip to main content

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் - எடப்பாடி பழனிசாமி

விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் - எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது போராட்டக்கார்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், கடந்த 4 ஆம் தேதி அமைதியான முறையில் கோரிக்கை யை வலியுறுத்தி விவசாயிகள்  சென்ற போது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 7 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது, அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தும் என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த விடியா திமுக அரசு பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும்,அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப் போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாய பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4.10.2023 அன்று, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் விடியா திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன் வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை இந்த விடியா திமுக அரசு போட்டிருக்கிறது.

மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் போல, அங்கே முள் வேலிகளைக் கொண்டுவந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டுவந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.

நியாயமான காரணங்கள்:

எனது தலைமையிலான கழக அரசு பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. இல்லாத காரணங்களையெல்லாம் சொல்லி திமுக பல அமைப்புகளைத் தூண்டிவிட்டபோதிலும், அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் கழக அரசு அனுமதி வழங்கி, காவல் துறை பாதுகாப்பையும் வழங்கியது. நியாயமான காரணங்கள் இருந்தபட்சத்தில் அவைகளை கழக அரசு நிறைவேற்றியும் தந்திருக்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுப்பதற்கு துப்பில்லாத, போராட்டம் உருவாவதற்குண்டான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தீர்த்து வைப்பதற்கும் வக்கில்லாத இந்த விடியா திமுக அரசு, காவல் துறையை தன்னுடைய ஏவல் துறையாக பயன்படுத்துவதை மட்டும் கனக் கச்சிதமாக செய்துகொண்டு வருகிறது.

அதிமுக போராட்டம் நடத்தும்:

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், விடியா திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...