பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை: கோவையில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!

நாடு முழுவதும் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22 ம் தேதி தேசிய புலனாய்வு முகமை NIA மற்றும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டாவது முறையாக நேற்று 8 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு தொடர்புடைய அமைப்புகள் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த ராமலிங்கம், சசிகுமார், கர்நாடகாவை சேர்ந்த பிரவீன் நெட்டார் உள்ளிட்டோர் கொலை வழக்கில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததுடன், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நிதி வசூல் செய்ததன் காரணமாகவும், இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், உபா
எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய 8 அமைப்புகளும் சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இந்த தடையை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் அறிவுறுத்தலையும் மீறி கோவையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் அருகே ஏராளமான இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து போராட்டம் நடத்திய பெண்களிடம் ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் விளக்கம் அளித்தனர்.
தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேலப்பாளையத்தில் மாநகர காவல் துணை ஆணையர்( கிழக்கு) சீனிவாசன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாதுகாப்பு கவச உடைய அணிந்த அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. அதேபோல் வஜ்ரா வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் நெல்லையில் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே என்ஐஏ சோதனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.
Comments
Post a Comment