டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்


வழிகாட்டுதல் குழுவில் 47 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்
காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார்.
அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.
இந் நிலையில் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
காந்தி குடும்பத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் ஜி 23 என்ற அதிருப்தி குழுவும் உருவானது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த தலைமை முடிவு செய்தது.
இதில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. அதே நேரம் காந்தி குடும்பத்தின் ஆதரவாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், கேரள மாநில காங்கிரஸ் எம்பி சசி தரூரும் இதில் போட்டியிட்டனர்.
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கார்கே பதவியேற்பு
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந் நிலையில் இன்று மல்லிகார்ஜுன கார்கேவின் பதவியேற்பு விழா தலை நகர் டெல்லியில் நடைபெற்றது.
இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதில் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 லோக்சபா தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வழிகாட்டுதல் குழு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் 47 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த வழிகாட்டுதல் குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்பிக்கள் மாணிக்கம் தாக்கூர், செல்லகுமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Comments
Post a Comment