இயற்கையின் எழிலரசி தேனி மாவட்டம்

தேனி: கேரளாவின் நுழைவு வாயில், மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியமான முகப்பு பகுதி,

கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, வாகமன், சபரிமலைக்கு நுழைவு வாயிலே தேனி தான். தமிழ்நாடு, கேரளாவின் எல்லையை ஒட்டியுள்ள தேனி மட்டுமே முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட மாவட்டம் ஆகும்.

தேனி மாவட்டத்திற்கு வத்தலக்குண்டு வழியாக வந்தால் மட்டுமே நிலப்பரப்பாக இருக்கும். மற்ற எல்லா பகுதிகளுமே மலைப்பகுதிகள் வழியாகத்தான் வர முடியும். தேனி மாவட்டத்தில் தான் வற்றாத ஊற்றாக எப்போது ஓடிக்கொண்டே இருக்கும் முல்லை பெரியாறு இருக்கிறது.

இந்த தண்ணீர் தான் தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது.

தேனி மாவட்டம் என்பது இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். இங்கு எத்தனை அருவிகள் உள்ளன என்பதை எண்ணவே முடியாது.

அந்த அளவிற்கு அருவிகள் உள்ளன. சுருளி அருவி, சின்ன சுருளி அருவி, கும்பக்கரை அருவி ஆகியவை மிகவும் பிரபலம் ஆனவை அகும். தேனி மாவட்டம் என்பது கடவுளே குடியிருக்க விரும்பும் பூமி என பலரும் கூறுவார்கள் 

தேனி மாவட்டத்தை சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

தேனியில் பைக்கை எடுத்தா, 2.30 மணி நேரத்தில் கொடைக்கானல் போய்விடலாம். அதேபோல் அதேநேரத்தில் மூணாறு போய்விடலாம். அதேபோல் தேனியில் இருந்து 1.30 மணி நேரத்தில் மேகலை போய்விடலாம். 2மணி நேரத்தில் தேக்கடி போக முடியும்.

காலை 6மணிக்கு வாகனத்தை எடுத்தால் 8 மணி அல்லது 9 மணிக்கு எல்லாம் தேனியை சுற்றியுள்ள கொடைக்கானல், மூணாறு, வாகமன், தேக்கடி, மேகலை என எந்த சுற்றுலா தளத்திற்கும் சென்றுவிட முடியும். அதேபோல் மாலை வரை அங்கு சுற்றி பார்த்துவிட்டு மலைகளில் தங்காமல் திரும்பிவந்துவிடவும் முடியும்.

பக்கத்திலேயே இருக்கும் டாப் கோடைவாசஸ்தலங்கள்
தேனி நகரில் இருந்து 10 நிமிடம் வாகனத்தில் பயணித்தாலே அடர்ந்த வனப்பகுதிக்குள் (வீரப்ப அய்யனார் கோவில் பகுதி) அழகிய ஆற்றுப்பகுதிக்கு சென்றுவிட முடியும். எந்த வெயிலும் இங்கு ஒன்றும் செய்யாது. மே மாதமான இப்போது கூட தேனி பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஆறுகளிலும் தண்ணீர் வழிந்தோடுகிறது.

ஆண்டிப்பட்டியில் இருந்து வெறும் அரை மணி நேரத்தில் வைகை அணை உள்ளது.

பெரியகுளத்தில் இருந்து வெறும் 7 கிலோ மீட்டர் தூரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது.

இதேபோல் பெரியகுளத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது.

இவை அனைத்துமே பார்ப்பதற்கு ரம்மியாக இருக்கும். கும்பக்கரை அருவி வழியாக வெள்ளகவி கிராமத்திற்கு டிரக்கிங் போகலாம். அங்கிருந்து கொடைக்கனாலை எளிதாக அடையலாம். இதற்கு வனத்துறை அனுமதி தேவை.

இதேபோல் போடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் குரங்கணி அருவி உள்ளது.

இது புகழ் பெற்ற சுற்றுலா தளம். இங்கிருந்து வெறும் 10 கிலோமீட்டர் நடந்து சென்றால் டாப் ஸ்டேசன் வரும். அங்கிருந்து எளிதாக மூணாறு போகலாம். இது புகழ் பெற்ற டிரக்கிங் வழித்தடம் ஆகும். இதில் டிரக்கிங் செய்யவும் வனத்துறை அனுமதி வேண்டும்.

இதேபோல் போடி மெட்டில் இருந்து சூரிய நெல்லி வழியாக ஜீப்பில் சென்றால், உயரமான தேயிலை தோட்டப்பகுதியான கொழுக்குமலை தெரியும். இதுவும் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தளம் ஆகும்.

சின்னமனூரில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்தால் அற்புதமான மேகமலை வரும். இதில் இயற்கை அன்னை அப்படியே இருக்கிறாள். இந்த அழகை சொல்ல வார்த்தைகள் போதாது.

கம்பத்தில் இருந்து வெறும் 40 நிமிடத்தில் தேக்கடியை அடைய முடியும். இதுவும் புகழ்பெற்ற சுற்றுலா தளம் ஆகும். இங்குதான் முல்லை பெரியாறு அணை மற்றும் புலிகள் காப்பகம் இருக்கிறது. இங்கு ஏரளாமான சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. இடுக்கி அணை, ராமக்கல் மேடு, வாகமன் என சுற்றுலா பகுதிகள் தேக்கடியை ஒட்டியே உள்ளன.

பெரியகுளத்தில் இருந்து வெறும் 70 கிலோ மீட்டர் தூரத்தில் கொடைக்கானல் உள்ளது.

அடுக்கம் வழியாக சென்றால் 40 கிலோ மீட்டர் தூரம் என்றாலும், இப்போது அந்த பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன.

வாகனங்கள் செல்லவே முடியாத அளவிற்கு சேதமாகி உள்ளதால், காட்ரோடு (வத்தலக்குண்டு) பாதையில் தான் போக முடியும். அதேபோல் போடியில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் மூணாறு உள்ளது.

இங்கு 100 ரூபாய் பேருந்தில் தங்கி மூணாறை ரசிக்க முடியும். கொடைக்காலை வெறும் 100ரூபாயில் சுற்றி பார்க்கவும் அரசு பேருந்துகள் வசதி உள்ளது.

கம்பத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சுருளி அருவியும் மிகவும் பிரபலம். அதேபோல் வருசநாடு பகுதியில் உள்ள சின்னசுருளி அருவி மிகவும் பிரபலம். இரண்டு அருவிகளும் ஒரே மலை (மேகமலை) வழியாக உற்பத்தியாகின்றன.

குச்சனூர் சனீஸ்வரன் கோவில், உத்தம பாளையம் ராகு கேது கோவில், வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில், ஆண்டிப்பட்ட வேலப்பர் கோவில், தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களும் பிரபலமானவை ஆகும்.

கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள மஞ்சாளாறு அணையும் சிறந்த சுற்றுலாத்தளம் ஆகும். பச்சை பசேல் என்ற நெல் வயல்கள், தென்னை மரங்கள், கரும்பு தோட்டங்கள் , வாழை தோப்புகள், அடர்ந்த வனப்பகுதிகள் என ஒரு மாவட்டமே மினி கேரளா போல் இருக்கும். தமிழ் சினிமாக்கள் அதிக அளவு எடுக்கப்படும் பகுதியும் தேனிதான்.

Comments