ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை, புதுச்சேரி ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் - சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன்

ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை, புதுச்சேரி ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் - சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன்

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

"சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 83 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பாக போலீஸ் நிலையத்தில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என காவல்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சென்னை நகரை பொறுத்தமட்டில் இந்த ஆய்வுக்கு 8 முதல் 10 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 3 முதல் 4 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இந்த ஆய்வுக்கு 14 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 7 முதல் 8 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் சென்னை சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் செயல்படும் பாஸ்போர்ட் மையங்களில் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம்.

2023-ம் ஆண்டு 20 ஆயிரம் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் தொடர்பான குறைகள் செல்போன், இ-மெயில், வாட்ஸ் அப், டுவிட்டர், ஸ்கைப் போன்றவற்றின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன." இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் பெறுவது எப்படி: வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம் ஆகும். பாஸ்போர்ட் எடுக்க ஒவ்வொரு பகுதியிலும் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இதற்கு நேரில் போய் விண்ணப்பிக்க முடியும். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

வீட்டில் இருந்துகொண்டே பாஸ்போர்ட் பெற எம்-பாஸ்போர்ட் சேவா (mPassport seva) செயலி மூலம் எளிதாக விண்ணப்பிக்க முடியும்  இந்த செயலியில் உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். பாஸ்போர்ட் பெற ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவுடன் போலீஸ் விசாரணை நடத்துவார்கள் அதன் பிறகு உங்கள் பாஸ்போர்ட் உங்கள் வீட்டு முகவரிக்கு டெலிவரி செய்யப்படும். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும். போலீசார் சென்னையில் 3 முதல் 4 நாட்களில் ஆய்வு நடத்துகிறார்கள். மற்ற பகுதிகளில் 14 நாட்கள் வரை ஆகிறது.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது எப்படி: முதலில் உங்கள் செல்போனில் mPassport seva ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். அந்த ஆப்பில் உள்ளே நுழைந்ததும் உங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதற்கு new user registration இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் முகவரியின் அடிப்படையில் உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

பெயர், பிறந்த தேதி, இமெயில் முகவரி மற்றும் பிற விவரங்களை உள்ளிட்ட பிறகு மாநில பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்ந்தெடுத்த பிறகு, உள்நுழைவு ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு submit பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இந்த செயல்முறையை முடித்த்வுடன் பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து உங்கள் இமெயிலுக்கு சரிபார்ப்பு இணைப்பு அனுப்பப்படும்.அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் மற்றொரு புதிய பக்கம் திறக்கும். சரிபார்ப்புக்காக உள்நுழைவு ஐடியை உள்ளிடுங்கள். உங்கள் கணக்கைச் சரிபார்த்த பிறகு நீங்கள் ஆப்பை குளோஸ் செய்துவிட்டு மீண்டும் உள்நுழையுஙகள். அடுத்து user tab இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். உள்நுழைவு ஐடி, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடுங்கள். அடுத்து, புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பட்டனை கிளிக் செய்யவும். அதன் பின்னர் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தையும், பாஸ்போர்ட் வகையையும் தேர்ந்தெடுங்கள்.

அதன் பின்னர், உங்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பின்னர் உங்கள் முகவரி மற்றும் தொடர்புக்கான தகவல்களை நிரப்புங்கள். இறுதியாக கட்டணம் செலுத்த வேண்டும். பாஸ்போர்ட் மையத்திற்குச் சென்று ஆவணங்களை சரிபார்த்த பின்னர் உங்கள் முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பப்படும்.

Comments