நீதித் துறையைப் பாதுகாக்க 600- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம்!

நீதித் துறையைப் பாதுகாக்க 600- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம்!

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உட்பட 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டுமெனவும் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

அதில், ``நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதித்துறை செயல்பாட்டில் செல்வாக்கு செலுத்தவும், ஒரு குழு முயன்று வருகிறது. அரசியல் வழக்குகளில், குறிப்பாக ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இது நமது நீதித்துறைக்குச் சேதம் விளைவிப்பதோடு நமது ஜனநாயக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

சில வழக்கறிஞர்கள் பகலில் அரசியல்வாதிகளுக்காக வாதாடுவதும், பின்னர் இரவில் ஊடகங்கள் மூலம் நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதும் கவலையளிக்கிறது. சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும் நிலைக்கு நமது நீதிமன்றங்களைத் தள்ளுகிறார்கள். இது நம் நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சேதப்படுத்தும். தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றங்களைக் குறைத்து மதிப்பிடும் இந்த முயற்சிகளை, எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது. இந்த தாக்குதல்களிலிருந்து நமது நீதிமன்றங்களைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வலுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்,``மற்றவர்களைத் துன்புறுத்துவதும் கொடுமைப்படுத்துவதும் பழங்கால காங்கிரஸ் கலாச்சாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களே 'உறுதியான நீதித்துறை'க்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் வெட்கமின்றி தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை விரும்புகிறார்கள், ஆனால் தேசத்திற்கான எந்தவொரு அர்ப்பணிப்பிலிருந்தும் ஒதுங்குகிறார்கள்," எனக் குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி 

இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,``பிரதமர் மோடி, நீங்கள் நீதித்துறைப் பற்றிப் பேசுகிறீர்களா?

இந்தியாவின் அரசமைப்பு நிறுவனங்களை உங்கள் தனிப்பட்ட சொத்தாகவே நீங்கள் கருதுவதால், உங்களிடம் கேட்கவேண்டி என்னிடம் சில கேள்விகள் உள்ளன

1. இந்தியாவின் நான்கு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் எப்போதும் இல்லாத வகையில், திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து,`நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில், அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது' என எச்சரிக்க வேண்டிய கட்டாயம் எந்த ஆட்சியில் நடந்தது என்பதை வசதியாக மறந்துவிட்டீர்கள்.

2.உங்கள் ஆட்சியில்தான் நீதிபதிகளில் ஒருவர் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே யார் 'உறுதியான நீதித்துறையை' விரும்புகிறார்?

3. இந்த மக்களவைத் தேர்தலில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அரசியலில் இடமளித்து மேற்கு வங்கத்தில் போட்டியிட நிறுத்தியதை மறந்துவிட்டீர்கள். அவருக்கு ஏன் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது?

4. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (NJAC) கொண்டு வந்தவர் யார்? ஏன் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் அது முடக்கப்பட்டது? எங்கே போனது உங்களின் உறுதியான நீதித்துறை விருப்பம்?

எனவே, பிரதமர் மோடி ஜி, உங்கள் சொந்த பாவங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள். ஜனநாயகத்தை கையாள்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments