Skip to main content

செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:-

"விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில், வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியை மத்தியப் பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.கள்ளச் சாராய, கஞ்சா வியாபாரிகளையும் கைது செய்வதற்கு திறனற்ற காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறி, பாமக நிர்வாகியை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தேடிச் சென்று கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை கிராமத்தில் கடந்த ஜூலை 1 ஆம் நாள் நான் பரப்புரை மேற்கொள்ளச் சென்றபோது, எனது கூட்டத்தில் பங்கேற்க முடியாத வகையில் அங்குள்ள மக்களை திமுகவினர் அவர்களால் உருவாக்கப்பட்ட பட்டியில் அடைத்து வைத்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களை அவசரம், அவசரமாக வேறு இடத்திற்கு திமுகவினர் அழைத்துச் சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பாமக தேர்தல் அலுவலகத்தை செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி தலைமையிலான குண்டர்கள் சூறையாடினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக நிர்வாகிகளையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இது தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேர் மீது கஞ்சனூர் காவல் நிலையத்தில் பா.ம.க.வினர் புகார் அளித்தனர். ஆனால், அதன் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. மாறாக, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பாமக நிர்வாகிகள் மீது திமுகவினர் கொடுத்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பொய்வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் தான் 20 நாட்களுக்குப் பிறகு அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் இளங்கோவன், திருநாவுக்கரசு ஆகியோரை கஞ்சனூர் காவல்துறையினர் கடந்த 22 ஆம் தேதி கைது செய்துள்ளனர். இந்த பொய் வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்ட காணை மேற்கு ஒன்றிய பாமக. துணை செயலாளர் முருகவேல், அவரது ஊர் மக்களுடன் வட மாநில சுற்றுலா சென்று விட்டு 22 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத் மாவட்டம் இட்டார்சி தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி ஏறுவதற்காக ஊர் மக்களுடன் காத்திருந்த போது, அவரை காவல்துறை கைது செய்து விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருக்கிறது.

திமுகவினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப் பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது.

இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். சட்டத்தின்படி செயல்பட வேண்டிய காவல்துறையினர், ஆளும் திமுகவின் ஏவல்துறையாக மாறி, அவர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு இந்த கைதை அரங்கேற்றியுள்ளனர்.

இவர்களின் கைகளில் தமிழகமும், தமிழக மக்களும் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பர்? என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

பாமகவினர் மீது ஜூலை 2 ஆம் தேதி தொடரப்பட்ட பொய்வழக்கின் மீது அடுத்த 15 நாட்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூலை 13 ஆம் நாள் விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, அத்தியூர் திருக்கையில் உள்ள 17,18,19,20 ஆகிய எண் கொண்ட 4 வாக்குச்சாவடிகளில் பாமக முறையே 601, 344, 70, 506 என மொத்தம் 1521 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. மாறாக, இந்த வாக்குச்சாவடிகளில் திமுக முறையே 259, 127, 472, 308 வாக்குகள் பெற்று 355 வாக்குகள் பின்தங்கி இருந்தது.

ஓட்டுக்கு பணத்தை வாரி இறைத்தும், அத்துமீறல்களை அரங்கேற்றியும் வாக்குகள் பெற முடியாத ஆத்திரத்தில் தான் திமுக தலைமை, காவல்துறையை ஏவி விட்டு பாமக நிர்வாகிகளை கைது செய்து குரூரமான மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இது அருவருக்கத்தக்க அரசியலாகும். மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பாமக நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப் பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த கடமை உணர்வை எல்லா வழக்குகளிலும் காட்டினால் தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கில் சிறந்து, சொர்க்கபுரியாக மாறி விடும். ஆனால், ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற கஞ்சா, கள்ளச்சாராய வியாபாரிகள் ஆகியோரிடம் மட்டும் இந்த காவல்துறை கனிவுடன் நடந்து கொள்கிறது.

கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், திமுகவினர் தூண்டி விட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப் பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது? காவல்துறையினரின் இந்த செயல் அவர்கள் அணிந்திருக்கும் சீருடைக்கு இழுக்கு; நேர்மையாக பணி செய்வதாக ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு களங்கம் ஆகும்.

1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கலைஞர், காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி சட்டப்பேரவையில் பேசும் போது, ''காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகி விட்டது'' என்று கூறினார். ஆனால், இப்போது ஈரல் மட்டுமல்ல, மூளை, இதயம் உள்பட காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. ஒருவேளை, இது பொய் என்றால், பொய்வழக்கில் எவ்வளவு விரைவாக செயல்பட்டு பாமக.வினரை கைது செய்தார்களோ, அதேவேகத்தில் பாமகவினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...