மத்திய அரசு ஜூலை 27-ல் கூட்டவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசு ஜூலை 27-ல் கூட்டவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், தமிழ்நாட்டில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
தமிழ்நாடு என்ற சொல் ஒரு இடத்தில் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் ஒன்று பட்ஜெட்டில் மேற்கோள்காட்டப்படும். அதுவும் இந்த முறை இடம் பெறவில்லை.
தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் இல்லை; தமிழ்நாடு அரசு முன்வைத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதற்கு பதிலடியாக மத்திய அரசு ஜூலை 27-ல் கூட்டியுள்ள நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்போம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லியில் தமிழ்நாடு எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடும் இந்தியாவில்தானே இருக்கு என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசைக் கண்டித்து திமுக, இடதுசாரிகள், மதிமுக, விசிக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே தமிழ்நாட்டிலும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கிவிட்டன. கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காதில் பூ சுற்றியபடி, தமிழ்நாட்டுக்கு கோவிந்தா! தமிழ் மக்களுக்கும் கோவிந்தா!என பஜனை பாடல்கள் பாணியில் பாடி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
Comments
Post a Comment