துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிய "பார்த்தா" சந்தானம்!
சென்னை: துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சந்தானம்.உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, "வாழ்த்துகள் முதலாளி" என சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார் சந்தானம்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சந்தானம், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் சந்தானம்.
துணை முதல்வர் உதயநிதியை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, "மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் முதலாளி.. இந்தத் தலைமைப் பதவியிலும் இன்னும் நிறைய வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்" என்றும் தெரிவித்துள்ளார் சந்தானம்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேண்டா' ஆகிய திரைப்படங்களில் உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படங்களில் இவர்களின் காமெடி காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக தேர்தல் களம் கண்டார் உதயநிதி ஸ்டாலின். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவைப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. இந்தப் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. 3 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், சேலம் ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment