காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜகவினர்!

 காங்கிரஸ்  அலுவலகத்தை சூறையாடிய பாஜகவினர்!

"நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எங்களை அடியுங்கள். ஆனால் நாங்கள் உண்மையையும் அரசியலமைப்பையும் தொடர்ந்து பாதுகாப்போம்" என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டு, 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கியது தேர்தல் ஆணையம். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி தலைமையில் பீகார் முழுவதும் பேரணி நடைபெற்று வருகிறது.

'வாக்காளர் அதிகாரம்' என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கிய இந்த பேரணி, வரும் செப்டம்பர் 1ஆம் தேதியன்று பாட்னாவில் முடிவடைகிறது.

இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி ராகுல் காந்தியுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பிரியங்கா காந்தி எம்பி, கனிமொழி எம்பி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கு இந்தியா கூட்டணி மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் நேற்று பீகார் தர்பங்காவில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்த மேடை மீது ஏறி, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் நௌஷாத் ஆலமின் ஆதரவாளர்களாக கூறப்படும் சிலர் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாய் குறித்தும் இழிவான சொற்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பியதாக தகவல் வெளியானது.

அமித் ஷா கண்டனம்!

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், "தர்பங்காவில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தளத்தைச் சேர்ந்த சிலர், பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீது ஒரு கறையாகும்.

ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸ் அரசியல் அதன் கீழ்நிலையை எட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஒரு ஏழை தாயின் மகன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பதையும், அவரது தலைமையின் கீழ் நாட்டை தொடர்ந்து முன்னேற்றி வருவதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இது காங்கிரஸ் கட்சி அதன் பழைய வழிகளுக்கும் தன்மைக்கும் திரும்பியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது, இதன் மூலம் அது எப்போதும் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை விஷமாக்கியுள்ளது.

குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை, காந்தி குடும்பம் மோடிக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதில் எந்தக் கல்லையும் விட்டுவிடவில்லை. இருப்பினும், இப்போது அவர்கள் ஒழுக்கத்தின் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டனர். இது ஒவ்வொரு தாய்க்கும், ஒவ்வொரு மகனுக்கும் ஒரு அவமானமாகும், இதற்காக 140 கோடி நாட்டு மக்களும் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" எனக் காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை!

அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியை கண்டித்து பாஜகவினர் இன்று பீகார் காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலக முற்றுகையிட்டு கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கட்சிக்கு எதிராக பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதல் வெடித்தது. இதில் இரு கட்சியினரும் மாறி மாறி கட்டைகளால் தாக்கிக் கொண்டனர்.

உடனே சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் இரு கட்சியினரையும் தடுத்து நிறுத்தி மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனர். மேலும், காயப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments