சிகிச்சைக்காக மனிதர்களை உணர்விழக்கச் செய்யும் க்ளோரோஃபார்ம்!
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜேம்ஸ் யங் சிம்சன் க்ளோரோபார்ம் கண்டுப்பிடித்த நாள் நவம்பர் 4. 1847.
இதற்கு முன்னரே, சிரிப்பூட்டும் வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை சிகிச்சைகளில் ஹம்ப்ரி டேவி 1799இல் பயன்படுத்தியிருந்தார். வில்லியம் மார்ட்டன் 1846இல் ஈதர்-ஐப் பயன்படுத்திக் காட்டினாலும், அது நோயாளியின் நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தியதால் அதிகம் பயன்படுத்தப்படவில்லை. க்ளோரோபார்ம் 1831இலேயே கண்டுபிடிக்கப்பட்டாலும், 1942 இல்தான் ராபர்ட் க்ளோவர், விலங்குகள்மீது அதன் உணர்விழக்கச் செய்யும் தன்மை குறித்து, தன் ஆய்வறிக்கையில் தெரிவித்தார். பெரிய விலங்குகளை உணர்விழக்கச்செய்ய இது பயன்படுத்தப்பட்டாலும், அச்சம் காரணமாக மனிதர்கள்மீது முயற்சிக்கப்படவில்லை.
சிம்சன் 18 வயதில் மருத்துவப்படிப்பில் தேறிவிட்டாலும், மருத்தும் பார்ப்பதற்கான சட்டப்படியான வயது பூர்த்தியாகாததால், 2 ஆண்டுகள் காத்திருந்து மருத்துவரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்சனுடன், அவரது உதவியாளர்களான மருத்துவர்கள், ஜேம்ஸ் மாத்யூஸ் டங்கன், ஜார்ஜ் ஸ்கீன் கெய்த் ஆகியோர் சேர்ந்து, தினமும் மாலை வேளையில் உணர்விழக்கச் செய்கிறதா என்று பல்வேறு வேதிமங்களையும் முயற்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படியான ஒரு முயற்சியில், க்ளோரோபார்மை 1847 நவம்பர் 4 அன்று சுவாசித்தவர்கள், மறுநாள் காலையில்தான் விழித்தனர்.
அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளில் க்ளோரோஃபார்ம் பயன்பாடு துவங்கினாலும், 1848இல் 15 வயதுச் சிறுமி, சிகிச்சையின்போது க்ளோரோஃபார்மால் உயிரிழந்தார். பின்னர், ஜான் ஸ்னோ என்பவர், நுகர்வதற்கான ஒரு கருவியை உருவாக்கியதைத் தொடர்ந்து, 1865இலிருந்து, 1920 வரையான காலத்தில் 95 சதவீத சிகிச்சைகளில் உணர்விழக்கச் செய்யும் மருந்தாக க்ளோரோஃபார்மே பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஈதரினால் 14000-28000 பேரில் ஒருவரும், க்ளோரோஃபார்மால் 3000-6000இல் ஒருவரும் இறப்பதாக, 1934இல் தொகுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று கூறியது. உணர்விழப்பினைக் கையாள மேம்பட்ட கருவிகளின் வருகையும், 1932இல் ஹெக்சோ-பார்பிட்டாலின் கண்டுபிடிப்பும், சிகிச்சைகளில் க்ளோரோஃபார்மின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்துவிட்டன.
Comments
Post a Comment